இந்தியாவின் பசுமை பாட்டி.....!

பசுமை பாட்டி 'சாலு மரத திம்மக்கா’

'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

 இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

'ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.

''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''
நாமும் கலங்கித்தான் போனோம்.

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

நன்றி:- அவள் விகடன்

என்னவென்றால் நாம் ஆயிரம் மரம் வளர்க்க வேண்டாம் குறைந்தது வீட்டுக்கு இரண்டு மரம் வளர்ப்போம்...!!! அதுவே மிக பெரிய பசுமை புரட்சியை உண்டாக்கும்...!!!

வருங்கால சந்ததிக்கு நாமும் ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்...!!!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More