‘‘நிலத்தை எடுத்தால்... நக்சலைட்டாக மாறுவோம்...!’’
 கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் கெய்ல் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கில் கருத்து கேட்கப்பட்டது.

தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலாவதாக காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கருத்து கேட்டார்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அய்யன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசும்போது, “என்னிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்து, இங்கு எரிவாயு குழாய் பதிக்கிறோம். உங்கள் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் உடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர்.

எனக்கு விவசாயம் தவிர வேறு வேலை தெரியாது. இதையும் எடுத்துக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது, தொழில் இல்லாதபோது எங்களால் வாழ முடியாது. எனவே என்னை வாழவழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன்'' என்று கூறி தேம்பி, தேம்பி அழுதார்.

நாராயணன் என்ற விவசாயி பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரி கள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்'' என்றார். இவரது பேச்சை ஆமோதிப்பதுபோன்று அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More