அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!





நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
பெரும் கேடு ஏற்படலாம் என்கிற பதைபதைப்பு நிலவிவந்தது. தற்போது அதெல்லாம் மறைந்து நிம்மதி பெருமூச்சு பிறந்திருக்கிறது.

இந்த மீட்புப் பணியில் இயற்கையின் உதவியை நாம் பெருமையோடு மனதில் கொள்ள வேண்டும். ஆம், அமாவாசை மற்றும் பௌர்ணமி என்றால், அந்த நாட்களிலும் அதையொட்டிய சில நாட்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வாடிக்கை. இதன் காரணமாக கடலோரங்களில் அலைகள் பெரிதாக எழும். நாளைக்கு (நவம்பர் 13) அமாவாசை எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது... இந்த மீட்பு முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.

மீட்பு முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலில் இறங்கி கப்பலை தள்ளாத குறையாக சென்னையிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாம் சரி, இத்தனை பிரச்னைகளுக்கும்... அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய செலவுகளுக்கும் காரணமே... சரத் பவார் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்... காலாவதியான கப்பல் என்பதோடு, சுமார் மூன்று மாத காலமாக அந்தக் கப்பலையும், ஊழியர்களையும் அதன் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.

தற்போது பல லட்ச ரூபாய் வாரியிறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த செலவையெல்லாம் நம் தலையில் (அரசாங்கம்) கட்டுவார்களா... அல்லது பவார் குடும்பம் பெருந்தன்மையோடு இறங்கி வந்து கணக்குப் பார்த்து கொடுக்குமா என்பதுபற்றி உருப்படியான தகவல்கள் இல்லை!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More