23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்..........!




  அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 17 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.

மிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான்.  தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.

யூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.

நியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.

இந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி,  பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா,  ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா  தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.

‘‘நிலத்தை எடுத்தால்... நக்சலைட்டாக மாறுவோம்...!’’




 கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் கெய்ல் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கில் கருத்து கேட்கப்பட்டது.

தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலாவதாக காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கருத்து கேட்டார்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அய்யன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசும்போது, “என்னிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்து, இங்கு எரிவாயு குழாய் பதிக்கிறோம். உங்கள் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் உடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர்.

எனக்கு விவசாயம் தவிர வேறு வேலை தெரியாது. இதையும் எடுத்துக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது, தொழில் இல்லாதபோது எங்களால் வாழ முடியாது. எனவே என்னை வாழவழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன்'' என்று கூறி தேம்பி, தேம்பி அழுதார்.

நாராயணன் என்ற விவசாயி பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரி கள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்'' என்றார். இவரது பேச்சை ஆமோதிப்பதுபோன்று அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!







மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க!!!!!!

கடல் எல்லையை எச்சரிககும் கருவி- தமிழனின் கண்டுபிடிப்பு






சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயி...ன்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!





நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
பெரும் கேடு ஏற்படலாம் என்கிற பதைபதைப்பு நிலவிவந்தது. தற்போது அதெல்லாம் மறைந்து நிம்மதி பெருமூச்சு பிறந்திருக்கிறது.

இந்த மீட்புப் பணியில் இயற்கையின் உதவியை நாம் பெருமையோடு மனதில் கொள்ள வேண்டும். ஆம், அமாவாசை மற்றும் பௌர்ணமி என்றால், அந்த நாட்களிலும் அதையொட்டிய சில நாட்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வாடிக்கை. இதன் காரணமாக கடலோரங்களில் அலைகள் பெரிதாக எழும். நாளைக்கு (நவம்பர் 13) அமாவாசை எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது... இந்த மீட்பு முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.

மீட்பு முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலில் இறங்கி கப்பலை தள்ளாத குறையாக சென்னையிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாம் சரி, இத்தனை பிரச்னைகளுக்கும்... அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய செலவுகளுக்கும் காரணமே... சரத் பவார் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்... காலாவதியான கப்பல் என்பதோடு, சுமார் மூன்று மாத காலமாக அந்தக் கப்பலையும், ஊழியர்களையும் அதன் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.

தற்போது பல லட்ச ரூபாய் வாரியிறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த செலவையெல்லாம் நம் தலையில் (அரசாங்கம்) கட்டுவார்களா... அல்லது பவார் குடும்பம் பெருந்தன்மையோடு இறங்கி வந்து கணக்குப் பார்த்து கொடுக்குமா என்பதுபற்றி உருப்படியான தகவல்கள் இல்லை!

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."இது ஒர் உண்மைக் கதை


ஒரு பெண் புலியின் வாக்குமூலம்,இது ஒர் உண்மைக் கதை. (மீள்பதிவு)

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச்சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.

''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.

''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''

''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''

''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''

''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''

''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'

''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''

''என்ன நடந்தது?''

''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.

அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'

''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''

''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'

''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'

''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''

''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''

''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''

''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''

''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''

''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''

''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''

''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''

(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.

ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''

''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'

(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''

(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

-நன்றி:  பேஸ்புக்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More