கொஞ்சம் வெயில்... கொள்ளை கரன்ட்... நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்!

''நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''
- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.


தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.
படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!
''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.

''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.
டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,
''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நிஜம்தானே!
தொடர்புக்கு,
கார்த்திகேயன்,
செல்போன்: 93677-89456

நன்றி விகடன் கட்டுரை


23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்..........!




  அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 17 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.

மிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான்.  தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.

யூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.

நியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.

இந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி,  பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா,  ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா  தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.

‘‘நிலத்தை எடுத்தால்... நக்சலைட்டாக மாறுவோம்...!’’




 கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் கெய்ல் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கில் கருத்து கேட்கப்பட்டது.

தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலாவதாக காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கருத்து கேட்டார்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அய்யன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசும்போது, “என்னிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்து, இங்கு எரிவாயு குழாய் பதிக்கிறோம். உங்கள் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் உடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர்.

எனக்கு விவசாயம் தவிர வேறு வேலை தெரியாது. இதையும் எடுத்துக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது, தொழில் இல்லாதபோது எங்களால் வாழ முடியாது. எனவே என்னை வாழவழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன்'' என்று கூறி தேம்பி, தேம்பி அழுதார்.

நாராயணன் என்ற விவசாயி பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரி கள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்'' என்றார். இவரது பேச்சை ஆமோதிப்பதுபோன்று அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!







மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க!!!!!!

கடல் எல்லையை எச்சரிககும் கருவி- தமிழனின் கண்டுபிடிப்பு






சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயி...ன்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!





நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
பெரும் கேடு ஏற்படலாம் என்கிற பதைபதைப்பு நிலவிவந்தது. தற்போது அதெல்லாம் மறைந்து நிம்மதி பெருமூச்சு பிறந்திருக்கிறது.

இந்த மீட்புப் பணியில் இயற்கையின் உதவியை நாம் பெருமையோடு மனதில் கொள்ள வேண்டும். ஆம், அமாவாசை மற்றும் பௌர்ணமி என்றால், அந்த நாட்களிலும் அதையொட்டிய சில நாட்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வாடிக்கை. இதன் காரணமாக கடலோரங்களில் அலைகள் பெரிதாக எழும். நாளைக்கு (நவம்பர் 13) அமாவாசை எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது... இந்த மீட்பு முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.

மீட்பு முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலில் இறங்கி கப்பலை தள்ளாத குறையாக சென்னையிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாம் சரி, இத்தனை பிரச்னைகளுக்கும்... அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய செலவுகளுக்கும் காரணமே... சரத் பவார் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்... காலாவதியான கப்பல் என்பதோடு, சுமார் மூன்று மாத காலமாக அந்தக் கப்பலையும், ஊழியர்களையும் அதன் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.

தற்போது பல லட்ச ரூபாய் வாரியிறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த செலவையெல்லாம் நம் தலையில் (அரசாங்கம்) கட்டுவார்களா... அல்லது பவார் குடும்பம் பெருந்தன்மையோடு இறங்கி வந்து கணக்குப் பார்த்து கொடுக்குமா என்பதுபற்றி உருப்படியான தகவல்கள் இல்லை!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More